Wednesday, 07.03.2024, 4:24 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

நோய் தீர்க்கும் பல்லி

பல்லிகள், வீடுகளையும், ஆலயங்களையும் இருப்பிடமாகக் கொண்டு இனிதே வாழ்கின்றன. பெரும்பாலும் பல்லிகள் ஒலியெழுப்புவதில்லை. மனித நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு, நிமித்தங்கள் அல்லது சகுனங்கள் மொழிகின்றன. புராணங்களில் பல்லிகள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உரிய வயதில் கல்வி கற்க, இருவரும் கௌதம ரிஷியின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டனர். இருவரும் முறையாகப் பாடம் பயின்று வந்தனர். குருவுக்குச் சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து குரு வார்த்தைக்கு மறு வார்த்தையின்றித் தங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தனர். கௌதம ரிஷி செய்யும் பூசைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், தீர்த்தம் முதலியன கொண்டு வருவார்கள்.

ஒரு நாள் இருவரும் தீர்த்தப் பாத்திரத்தை மூடி வைக்காமல் திறந்தபடியே வைத்துவிட்டார்கள். பல்லியொன்று அந்தத் தீர்த்தப் பாத்திரத்திற்குள் விழுந்து உயிரோடு தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஹேமனும், சுக்லனும் பூஜா திரவியங்களைக் குருவிடம் அப்படியே கொடுத்தனர். கௌதம ரிஷியும் பாத்திரத்தைத் தொட்டவுடன் அதிலிருந்த பல்லி தாவிக் குதித்து ஓடியது. அதைக் கண்டு கோபம் கொண்ட ரிஷி, பணியில் கவனமில்லாமல் இருந்த அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.

இருவரும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினர். மேலும் சாபம் நீங்கப் பிராயச்சித்தம் கோரியும் நின்றனர். இந்திரன் யானையாகி வரதனைத் தரிசிக்க அத்திகிரிக்கு வருவான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்று விமோசனத்துக்கு வழி கூறினார் ரிஷி.

ஹேமனும், சுக்லனும் பல்லியுருவைப் பெற்றுக் காஞ்சிபுரத்திலுள்ள அத்திகிரி க்ஷேத்திரத்தில் பல்லி உருவில் வசித்தனர். முனிவர் சொன்னபடி நடக்கவே பல்லி உருவம் நீங்கப் பெற்று வரதராஜப் பெருமானைச் சேவித்து நற்கதி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியைக் குறித்து காஞ்சி வரதராஜர் கோயில் பிரகாரத்தின் வடகிழக்கு முலையில் கச்சிவாய்த்தான் மண்டபம் என்ற ஒரு நாற்கால் மண்டபத்தை அடுத்து வைய மாளிகைப் பல்லி என்று பேர் பெற்று, இரண்டு பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்தளத்தில் ஒன்று தங்கத்திலும் ஒன்று வெள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறார்கள். ஏணி வழியாக ஏறிக் கைகளாலும் வஸ்திரத்தாலும் அந்தப் பல்லியைத் தொட்டு வரதனை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சி காலங்காலமாகப் பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. இங்குள்ள ஆண்டாள் சந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய சுவரில் மூன்றடி நீளமுள்ள பெரிய பல்லி ஒன்றின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இதை மோட்சப் பல்லி என்று அழைக்கிறார்கள். பக்தர்கள் இதைத் தொட்டுத் தடவியும், திருவிளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். முக்கியமாக ஊர்வன ஜந்துக்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள். நோய் தீர்க்கும் பல்லியாக வழிபடுகிறார்கள்.

இவ்வாறு இரு தலங்களில் உள்ள பல்லிகள் பக்தர்களின் வழிபாட்டுக்குரியனவாகத் திகழ்கின்றன. இதுபோன்று பல்லியை வழிபாடு செய்வது வேறெங்கும் இல்லை எனத் தெரிகிறது.பல்லி சொல் கேட்டல் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பல்லி சொல்லும் ராசிபலன் ஓர் அற்புதமான பாடல் மூலம் சொல்லப்படுகிறது.

“எழுவாய் மேஷம் படைபூசல்
இடவங் கடகங் குடிபோக்கும்
நழுவாய் மிதுன நல்வசனம்
நண்டு விழுந்து களிப்பாகும்
கழிவே யாகுந் தனஞ் சிங்கம்
கன்னி பழங்காய் வெற்றிலையாம்
தொழுதே தூதன் றுலமாகும்
தூங்கு தேள் பொன் பெண் வருத்தே

வில்லில் விருந்து மிகவுண்டு
வேண்டும் மகரம் விண்ணமுதாம்
நல்ல கும்ப நோயுண்டாம்
நாட்டு மீனங் களியாகும்
அல்லிற் சிறந்த குழன்மடவா
யறியச் சொன்னோ மன்னிசையாஞ்
சொல்லும் பல்லி கொடி சூரன்
தும்ம லென்றே யறிந்திடவே”

இப்பாடலில் மேஷம், இடவம், கடகம், மிதுனம், நண்டு, சிங்கம், கன்னி, தேள், வில், மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரு ராசிகளும் அவற்றுடன் பல்லி சொல்லுக்குப் பலன்களும் கூறப்பட்டுள்ளன.

பல்லி சொல்லும் பதினாறு பலன்கள் : இது பல்லி தொடர்ந்து ஒன்று முதல் பதினாறு முறை சொல்லும் சொல்லுக்குரிய பலன்களைக் குறிக்கும் பாடலாகும்.

“அருக்கன் மேற் பயநாச மிரண்டிற் சாவு
அகன்ற வர்பின் மீண்டிடுவார் மூன்றே யாகில்
உருக்கமுள்ள சாவதனைக் கேட்க நாலு
ஒரு சண்டை யுண்டைந்தா முறவாமாறு
விரிதலையு மழுகுரலு மழையு நோயு
மென் மேலுந் துக்க முண்டாகு மேழு
தரித்திடு பூச்சந்தனமு மணமும் கொண்டு
தகுதியுள்ளோர் கூடி வரலாகு மெட்டே”

“சித்தமிக மகிழ்ச்சியுண்டா நாலோ டைந்து
தீதாகவே யுரைக்குந் தெரியும் பத்து
அத்தமிசை யாத்திரை காணா றோடைநது
அக மகிழ்ச்சிக் கலியாணமா றோடாறு
பத்தி வருங் காணிக்கை பதிமூன்றிற்குப்
பறந்துவரு மிழவோலை பதினாலுக்கு
மெத்தவரு முறவின் முறை யேழுமெட்டும்
மென்மேலும் போகமுண்டாம் பதினாறுக்கே”

இப்பாடலில் பல்லி ஒருமுறை ஒலி எழுப்பினால் என்ன பலன். இரண்டு முறை ஒலித்தால் என்ன பலன். இப்படி வரிசைக் கிரமமாக எண்ணிக்கைப்படி பதினாறு முறை ஒலித்தால் என்ன பலன் என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இப்பாடலும் யாரால் எப்போது இயற்றப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. இப்பாடல்கள் பழம்பெரும் நூலான அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.

இவ்வாறு பல்லி சொல் குறித்த பழம் பாடல்கள் அதன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை வலியுறுத்திக் கூறுகின்றன. சங்க காலம் தொட்டே மனிதகுலம் பல்லியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டே வந்திருக்கிறது என்பதை உறுதியுடன் நம்பலாம்.

பழமொழிகள்

பல்லி குறித்துப் பல பழமொழிகளும் உள்ளன. இல்லை இல்லை என்ற இடத்தில் பல்லியும் சேராது என்றும், பல்லி சொல்லுக்குப் பலனுண்டு என்றும், கௌளி சொன்னா கடவுள் சொன்ன மாதிரி என்றும், ஈசான்யத்தில் பல்லி சொன்னா ஈசுவரனே சொன்ன மாதிரி என்றும் மொழியப்படும் சொலவடைகள் மக்களிடையே வழங்கப்படுகின்றன. ஈசான்ய மூலையில் பல்லி சொல்வது மிகவும் உத்தமமானது என்ற நம்பிக்கையும் மக்களிடம் மிகுதியாகக் காணப்படுகிறது.

நன்றி  அன்புடன்

S.மேகநாதன் ,M.Com, D.A A.D.A, ASTRO

                 

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz